என் நினைவு சின்னம்
நான் விடைபெற்றுக்கொண்டுவிட்ட செய்தி
உன்னை வந்து எட்டியதும்
நண்ப
பதறாதே
ஒரு இலை உதிர்ந்ததற்கு மேல் எதுவும் அதில் இல்லை.
இரங்கற் கூட்டம் போட ஆள் பிடிக்க அலையாதே
நம் கலாச்சார தூண்களின்
தடித்தனங்களை எண்ணி
மனச்சோர்வில் ஆழ்ந்து கலங்காதே.
நண்ப
சிறிது யோசித்துப்பார்
உலகெங்கும் கணந்தோறும்
இழப்பின் துக்கங்களில்
ஒரு கோடி கண்கள் கலங்குகின்றன
ஒரு கோடி நெஞ்சங்கள் குமுறி வெடிக்கின்றன.
நண்ப
நீ அறிவாயா
உன் அடிச்சுவடு ஒவ்வொன்றிலும்
அழிகின்றன ஒரு கோடி உயிர்கள்.
இருப்பினும்
நண்ப
ஒன்று மட்டும் செய்
என்னை அறியாத உன் நண்பனிடம்
ஓடோடிச் சென்று
கவிதையை எழுப்ப முயன்று கொண்டிருந்தவன்
மறைந்துவிட்டான் என்று மட்டும் சொல்.
இவ்வார்த்தைகளை நீ கூறும் போது
உன் கண்ணீர்
ஒரு சொட்டு
இந்த மண்ணில் உதிரும் என்றால்
போதும் எனக்கு
- பசுவய்யா
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment