Wednesday, August 13, 2008

படித்ததில் பிடித்தவை - பசுவய்யா கவிதைகள்

என் நினைவு சின்னம்

நான் விடைபெற்றுக்கொண்டுவிட்ட செய்தி
உன்னை வந்து எட்டியதும்
நண்ப
பதறாதே
ஒரு இலை உதிர்ந்ததற்கு மேல் எதுவும் அதில் இல்லை.

இரங்கற் கூட்டம் போட ஆள் பிடிக்க அலையாதே
நம் கலாச்சார தூண்களின்
தடித்தனங்களை எண்ணி
மனச்சோர்வில் ஆழ்ந்து கலங்காதே.

நண்ப
சிறிது யோசித்துப்பார்
உலகெங்கும் கணந்தோறும்
இழப்பின் துக்கங்களில்
ஒரு கோடி கண்கள் கலங்குகின்றன
ஒரு கோடி நெஞ்சங்கள் குமுறி வெடிக்கின்றன.

நண்ப
நீ அறிவாயா
உன் அடிச்சுவடு ஒவ்வொன்றிலும்
அழிகின்றன ஒரு கோடி உயிர்கள்.

இருப்பினும்
நண்ப
ஒன்று மட்டும் செய்
என்னை அறியாத உன் நண்பனிடம்
ஓடோடிச் சென்று
கவிதையை எழுப்ப முயன்று கொண்டிருந்தவன்
மறைந்துவிட்டான் என்று மட்டும் சொல்.
இவ்வார்த்தைகளை நீ கூறும் போது
உன் கண்ணீர்
ஒரு சொட்டு
இந்த மண்ணில் உதிரும் என்றால்
போதும் எனக்கு
- பசுவய்யா


Monday, August 11, 2008

கொமுரு கவிதைகள்

கேள்வியும் பதிலும்

கேள்விகள் மழைகால ஈசல் போல
சட்டையில் படுக்கையில் நீரில் காற்றில்
உடம்போடு ஒட்டி உதற முடியாமல்

பதிலை பிடித்து பொருத்திவிட்டால்
கேள்விகளை தொலைத்துவிடலாம்
பொருத்தியபோது கேள்விகள் தொலையவில்லை

பதில்கள் கேள்விகளை விட அதிகமானது
இத்தேடலில் தெரிந்தது தொலைந்தது
நான் மட்டுமே என்று.


வாழ்க்கை

கழித்த வருடங்கள் வீண் - நண்பன்
காசாகவில்லை - மனைவி
ஏழை பாவம் - சமுதாயம்

கடவுளும் காதலிகளும் இல்லாத வாழ்க்கை
உயிரில் உணர்வின் ஒரு சலிப்பு
கூடிய சுமையில் கூனான ஒரு முதுகு

துடிக்கும் இவ்விதயம் நிற்றலில்
வாய்க்கும் இன்னொருவனுக்கு
இவ்வாழ்க்கை !


விதைப்பு

விதைப்பதே எனது வேலை
பூப்பதை கணக்கிடுவதல்ல

ஈரமான வயல்களில் விதைத்தேன்
முளைத்திருக்கக்கூடும்

மரங்கள் அறியுமோ தான்
எத்தனை பூத்தோம் என்று

மண்ணும் விதையும் அறியும்
விதைத்தவன் அறிவானோ?

எங்கேயும் விதைக்கலாம்
விதைப்பவனுக்குத் தேவை
ஈரமான வயல்களே !